உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், கடுமையான பாதப் பிரச்சனைகள் நேரக்கூடிய ஆபத்து இருக்கிறது. இரத்த குளுக்கோஸ் அளவு நல்ல கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், கால்களுக்கும் பாதங்களுக்கும் செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து, நரம்புகள் சிதையக்கூடும்.
இதனால் ஏற்படக்கூடியவை
- பாதங்களில் உள்ள காயங்கள் அல்லது புண்கள் நன்றாக ஆறாது.
- பாதங்கள் மரத்துப்போகும். உங்களால் வலியை உணர முடியாது என்பதால், பாதங்களில் காயம்பட்டால் உங்களுக்குத் தெரியாமல் போய்விடும்.
எனவே, உங்களது இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, முறையான பாதப் பராமரிப்பை மேற்கொண்டு, பாதங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். ஆண்டுக்குக் குறைந்தது ஒரு தடவையாவது முறையான பாதப் பரிசோதனைக்குச் செல்லுங்கள்.
பாதங்களைச் சுத்தம் செய்தல்
- லேசான சவர்க்காரமும் வெதுவெதுப்பான நீரும் கொண்டு பாதங்களைத் தினமும் கழுவுங்கள்
- பாதங்களை நன்றாக உலர்த்துங்கள், குறிப்பாக விரல்களின் இடுக்குகளில்
- பாதங்களில் வெடிப்புகளைத் தவிர்க்க, தினமும் ஈரப்பதமூட்டியைத் தடவுங்கள்
பாதங்களைக் கவனித்திடுங்கள்
- பாதங்களைத் தினமும் கவனித்திடுங்கள். விரல்களின் இடுக்குகளில், குதிகாலில், உள்ளங்காலில் ஏதாவது வெட்டுகள், வீக்கம், சிவப்பேறல், கொப்பளங்கள் அல்லது சீழ் வடியல் இருக்கிறதா எனப் பாருங்கள்
- உள்ளங்காலைப் பார்ப்பது சிரமமாக இருந்தால், யாரிடமாவது உதவி கேளுங்கள் அல்லது முகம் பார்க்கும் கண்ணாடியைப் பயன்படுத்துங்கள்.
நகங்களை வெட்டுதல்
- கால்விரல் நகங்களை வாரந்தோறும் வெட்டுங்கள். நகத்தின் குறுக்கே நேராக வெட்டுங்கள். மிகவும் கட்டையாக வெட்ட வேண்டாம்
- நகத்தின் ஓரங்களில் நக அரத்தைப் பயன்படுத்துங்கள்
- நகத்தின் ஓர முனைகளை வெட்டாதீர்கள்
தோல் தடிப்புகளையும் காய்ப்புகளையும் சமாளித்தல்
- அமில சிகிச்சைகளை அல்லது தோல்தடிப்பு பிளாஸ்தர்களைப் பயன்படுத்தாதீர்கள்
- தோல்தடிப்பை இளகச்செய்ய 10% யூரியா கிரீம் பயன்படுத்துங்கள். அது பலனளிக்காவிட்டால், பாத சிகிச்சையாளரிடம் அல்லது மருத்துவரிடம் செல்லுங்கள்
- பாதங்களில் கூரான கருவிகளைப் பயன்படுத்தாதீர்கள்
பாதத்திலுள்ள காயங்களைச் சுத்தம் செய்தல்
- உங்களுக்குக் காயம்பட்டால், வழக்கமான உப்புநீர் திரவத்துடன் சுத்தம் செய்து, அப்பகுதியைக் கவனமாக உலர்த்துங்கள்
- கிருமிநாசினி மருந்து தடவி, ஈரமில்லாத சுத்தமான காயக்கட்டை ஒட்டி மூடுங்கள்
- காயத்தைத் தினமும் கவனித்திடுங்கள். காயம் 2 நாட்களுக்குப் பிறகும் தேறாவிட்டால், மருத்துவரிடம் அல்லது பாத சிகிச்சையாளரிடம் செல்லுங்கள்.
Back to top
காலணிகள்
- எப்போதும் காலணிகளை அணிந்திருங்கள். வீட்டில் இருக்கும் போதுகூட காலணிகள் அணிவது அவசியம் வெறுங்காலில் நடக்காதீர்கள்
- காலணிகள் சௌகரியமாகவும் சரியாகப் பொருந்துவதாகவும் இருக்கவேண்டும்
- காலணிகளின் உள்ளே கற்கள், கூரான பொருட்கள் இருக்கிறதா என்பதைக் கவனித்திடுங்கள்
- காலணிகளுடன் எப்போதும் பருத்தி காலுறைகளை அணிந்திருங்கள்
- காலுறைகள் மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது
- கால்விரல்களை மூடாத செருப்புகளை அல்லது பாதப்பிடிப்பு செருப்புகளை அணியாதீர்கள்
தவிர்க்க வேண்டியவை
- பாதங்களை மிகவும் குளிர்ச்சியான அல்லது மிகவும் சூடான நீரில் ஊற வைக்காதீர்கள்.
- கால்விரல்களின் இடுக்குகளில் ஈரப்பதமூட்டிகளைத் தடவாதீர்கள்
- பாதப்பிடிப்பு இயந்திரங்கள், பாத அழுத்த சிகிச்சை, குத்தூசி மருத்துவம் ஆகியவற்றைத் தவிர்த்திடுங்கள்
பாதப் பிரச்சனைகளைத் தவிர்க்க, உங்கள் இரத்தச் சர்க்கரை அளவை நல்ல கட்டுப்பாட்டில் ளவத்திருப்பது அவசியம். ஆண்டுக்குக் குறைந்தது ஒரு தடவையாவது முறையான பாதப் பரிசோதனைக்குச் செல்லுங்கள்.